வடக்கு கிழக்கு இலண்டன் தமிழர் நலன்புரி ஒன்றியம் உதவிக்கரம் நிகழ்வில் மூலம் ஈழத்தில் கல்விப் பணிக்கு உதவி

வடக்கு கிழக்கு இலண்டன் தமிழர் நலன்புரி ஒன்றியம் உதவிக்கரம் நிகழ்வில் மூலம் ஈழத்தில் கல்விப் பணிக்கு உதவி
[ சனிக்கிழமை, 26 மார்ச் 2011, 02:13.44 PM GMT ]

லண்டன் சிவன் ஆலயத்தில் கடந்த 19.03.2011ம் திகதி அன்று நடாத்தப்பட்ட வடக்கு கிழக்கு இலண்டன் தமிழர் நலன்புரி ஒன்றியத்தின் உதவிக்கரம் என்னும் நிகழ்வு மூலம் பெறப்பட்ட நிதிகள்…

இலங்கை திருநாட்டில் கடந்த யுத்த சூழலாலும் வெள்ள அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வறிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் பணிக்கு வழங்கப்படவுள்ளன. இவ்வகையில் 4525 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் நிதி உதவிக்கரம் நிகழ்வு மூலம் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிதி மூலம் கிட்டத்தட்ட 4500 பாதிக்கப்பட்ட வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வேளை இதில் கீழ்வரும் அமைப்புக்கள் உதவிகளை வழங்கி உள்ளது. அத்துடன் பல மனிதநேயம் மிக்க அன்பர்களும் உதவி வழங்கி உள்ளனர். இவ்வகையில்

1. கென்ஸோ இஷ்னரியூ கராட்டி அக்கடமி தலைவர் திரு.ரவீந்திரன் செயலாளர் திரு.நந்தகுமார்
2. சலங்கை நாதம் பரதநாட்டியக் கல்லூரி ஆசிரியை திருமதி.மாலதி ஜெயநாயகம்
3. சலங்கை நந்தனாலாயா பரதநாட்டிக் கல்லூரி ஆசிரியை திருமதி.அகன்யா அருளானந்தசிவம்
4. கிட்ஸ் ஓவ் போனிக்ஸ் நாட்டிய குழு ஆசிரியர் ஏ.ஜே.அருளானந்தசிவம்
5. கப்ற்று ஆண் பெண் நடனக்குழு
6. ரம்ரெக் கல்லூரி ஆசிரியர் திரு.பி.சீலன்
7. வயலின் சாய் ரிதம் சகோதரர்கள்
8. எவரஸ்ட் கறி கிங் உரிமையாளர் திரு.சிவராசா
9. சண் மோட்டோர்ஸ் உரிமையாளர் திரு.ஜெயலிங்கம் போன்றோர் குறிப்பிடக் கூடியவராக உள்ளனர்.

இவ் உதவி வழங்கும் நிகழ்வை லண்டன் சிவன் ஆலய செயலாளர் சிவத்திரு.கணேசலிங்கம் அவர்கள் ஒழுங்கு செய்தார். பிரதம விருந்தினராக லண்டன் சைவத் திருக்கோயில் ஒன்றியத் தலைவர் திரு.எஸ்.கருணலிங்கம் அவர்களும் அவரது துணைவியார் வைத்திய கலாநிதி திருமதி.சு. கருணலிங்கம் அவர்களும் கலந்து கொண்டனர். விழா அமைப்பாளராக திரு.தம்பிராஜா உதயகுமார் திரு.இராசையா ஜெயராஜா திரு.தம்பிப்பிள்ளை தவசீலன் கடமைபுரிந்தனர்.

லண்டன் சைவ ஆலயங்கள் ஒன்றிணைந்து ஈழத்தமிழரின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்புவோம் – லண்டன் சைவத் திருக்கோயில் ஒன்றியத் தலைவர்

ஈழ மண்ணில் இருந்து புலம்பெயர்ந்து வந்தாலும் எமது மண் வாசனையை மறவாது லண்டனில் உள்ள சில சைவ ஆலயங்கள் ஒன்றிணைந்து சைவத் திருக்கோயில் ஒன்றியத்தை தாபித்து அதன் மூலம் ஈழதமிழர்கள் துன்புறும் போது மதபேதமின்றி இயன்றளவு மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றோம். இவ்வாறு லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயத் தலைவரும் லண்டன் சைவத் திருக்கோயில் ஒன்றியத் தலைவருமான சிவத்தொண்டன் எஸ்.கருணலிங்கம் அவர்கள் வடக்கு கிழக்கு இலண்டன் தமிழர் நலன்புரி ஒன்றியம் ஈழத்தில் யுத்தத்தாலும் வெள்ள அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக உதவும் வகையில் நடாத்திய உதவிக்கரம் என்னும் ஒன்று கூடல் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

தமது துணைவியார் வைத்திய கலாநிதி திருமதி.சு.கருணலிங்கம் சகிதம் லண்டன் சிவன் ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இவர் தொடர்ந்து கூறியதாவது. ஆரம்ப காலம் முதல் லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயங்களின் மூலம் ஈழத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட யுத்த அனர்த்தம் இயற்கை அனர்த்தம் போன்றவற்றாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்ப உதவியதுடன் சுயதொழில் பயிற்சி சுயதொழில் உதவிகளை வழங்கியும் சிறுவர் பராமரிப்பகங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏற்படுத்தியும் பல சேவைகள் வழங்கி வருகின்றோம். இக்கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் பெரும்பாலான நிதி பாதிக்கப்படும் இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களின் சேவைக்கே பயன்படுத்தப்படுகின்றது. இன்று லண்டனில் உள்ள சில குறிப்பிட்ட சைவ ஆலயங்கள் ஒன்றிணைந்து நாங்கள் ஆரம்பித்த லண்டன் சைவத் திருக்கோயில் ஒன்றியத்தின் மூலம் பல சேவைகைளை இலங்கையில் வடமாகாணம் கிழக்கு மாகாணம் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கியுள்ளோம்.

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிப்பட்ட மக்களின் அவசிய உணவு தேவை உட்பட பல அவசிய தேவைகளுக்காக இயன்றளவு நிதிகளை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை மூலம் வழங்கினோம். உண்மையிலே மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தமது பணியை மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமின்றி அம்பாறை திருகோணமலை மாவட்டங்களிலும் வழங்கி வருவதை எங்கள் பிரதிநிதிகள் நேரடியாக சென்று இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் பார்வையிட்டதன் மூலம் உணர்ந்து கொண்டோம். இதன் தலைவராக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் ஒரு சமூக சேவையாளன் இவர் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்ட அமைப்புக்கள் ஆலயங்கள் குருமார்கள் ஒன்றிணைந்த கிழக்கு இந்து ஒன்றியத்தின் தலைவராகவும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவராக இருந்து தன்னலம் கருதாது பல பணிகளை கிழக்கு மண்ணிலும் வட மாகாண மண்ணிலும் வழங்கி வருகின்றார்.

இவரது பெரும்பணி வறிய மக்கள் வாழ்வாதாரத்தை மேன்படுத்தி வருகின்றது. இம்முறை எங்களால் சைவத்திருக்கோயில் ஒன்றியம் மூலம் வழங்கப்பட்ட நிதி உதவிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு சரியான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எங்களது சேவையை கண்ணுற்ற லண்டனில் உள்ள பல ஆலயங்கள் தற்போது எங்களது ஒன்றியத்தில் இணைந்து கொள்ள முன்வந்துள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது.

உண்மையில் லண்டனில் உள்ள அனைத்து சைவ ஆலயங்களும் இணைந்து செயற்பட்டால் கடந்த யுத்த சூழலாலும் இயற்கை அனர்த்தத்தாலும் துன்புறும் எமது உறவுகளில் கல்வி உட்பட வாழ்வாதாரத்தை கட்டி எழுப்ப முடியும். பல சேவைகளை வறிய மக்களுக்கு வழங்க முடியும். இம்முறை வெள்ள நிவாரண உதவிகளை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை எதுவித மதவேறுபாடும் இன்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியதுடன் மிகவும் பின்தங்கிய கிராமங்களின் பசியை போக்க எங்கள் நிதிகள் பயன்பட்டுள்ளதை இட்டு நாங்கள் மகிழ்ச்ச்p அடைகின்றோம்.

இன்று இவ் உதவிக்கரம் நிகழ்வு மூலம் திரட்டப்படும் நிதி யுத்தத்தாலும் வெள்ள அனர்த்தத்தாலும் கல்வி நிலையில் பின்னடைவு கண்ட எமது ஈழநாட்டு வறிய மாணவர்களின் கல்வி மேன்பாட்டுக்காக சேர்க்கப்படுகின்றது. எம்மிடம் அழிக்க முடியாத கல்வி சொத்தை வளர்ப்பதற்கு இது உதவுகின்றது. எமது தாய்நாட்டின் வறிய மாணவர்களுக்கு உதவிகள் வழங்க முன் வந்த அனைத்து அமைப்புக்கும் தனி அன்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவிப்பதுடன். இந்த விழாவை ஏற்பாடு செய்த லண்டன் சிவன் ஆலயச் செயலாளர் திரு.எஸ்.கணேசமூர்த்தி அவர்கட்கும் விழா அமைப்பாளர்களாக விளங்கிய தம்பிராஜா உதயகுமார் இராசையா ஜெயராஜா தம்மிப்பிள்ளை தவசீலன் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன் என கூறி உரையை நிறைவு செய்தார்.

ஈழநாட்டின் கிழக்கு மண்ணில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு உதவிய சைவத் திருக்கோயில் ஒன்றியத்திற்கு நன்றி தெரிவிப்பு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவி கோரிய போது லண்டன் சைவத் திருக்கோயில் ஒன்றியம் வழங்கிய நிதி உதவிக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும் கிழக்கு இந்து ஒன்றியமும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றது.

மழையும் குளங்களின் உடைப்பும் குளங்கள் நிரம்பி வழிதலும் ஏற்பட்டதால் மட்டக்களப்பு மாவட்டத்தின் 80 வீதமான கிராமங்களும் அம்பாறை திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த சில கிராமங்களும் கடும் பாதிப்பை எதிர்கொண்டது. இவ்வேளை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் விடுத்த வேண்டுகோளில் லண்டனில் உள்ள சைவத் திருக்கோயில் ஒன்றியம் மூலம் லண்டன் வாழ் தர்ம சிந்தையாளர்களால் வழங்கப்பட்ட நிதிகள் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைக்கு வழங்கப்பட்டது.

இந்நிதி மூலம் உடனடி உணவுத் தேவைகள் உடைகள் பாத்திரங்கள் உட்பட பல சேவைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் மேற்கௌ;ளப்பட்டது. லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் லண்டன் சிவன் ஆலயம் கணபதி ஆலயம் லண்டன் உயர்வாசல் குன்று முருகன் ஆலயம் லண்டன் நாகபூசனி அம்மன் ஆலயம் லண்டன் கற்பக விநாயகர் ஆலயம் போன்றவை இவைகளில் குறிப்பிடக்கூடியவை.

இவ்வேளை இவ் உதவியை இவ் ஈழமண்ணில் வெள்ளத்தால் துன்புறும் மக்களுக்கு வழங்கக் காரணமாக இருந்தவர் மக்கள் சேவகன் தன்னலம் கருதாத தொண்டன் லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய கௌரவ தலைவர் லண்டன் சைவத் திருக்கோயில் ஒன்றியத் தலைவருமான சிவத்தொண்டன் திரு.எஸ்.கருணலிங்கம் அவர்களும் மக்கள் சேவையே மகேசன் சேவை என என்றும் தமது மனதில் கொண்டு செயற்படும் லண்டன் சிவன் ஆலய செயலாளரும் லண்டன் சைவத் திருக்கோயில் ஒன்றியச் செயலாளருமான சிவத்தொண்டன் திரு.எஸ்.கணேசமூர்த்தி அவர்களுமாகும். இவர்களின் உதவியை ஈழத்தின் கிழக்கு மக்கள் என்றும் மறக்க முடியாது.

லண்டன் கனதுர்க்கை அம்மன் ஆலயத்தின் தலைவராக விளங்கும் சிவத்தொண்டன் திரு.எஸ்.கருணலிங்கம் உண்மையிலே கருணை உள்ளம் படைத்தவர். இவர் ஈழ மண்ணில் யுத்தம் ஏற்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை தன்னலமற்ற பெரும் சேவையை வழங்கி வருகின்றார். வடக்கு கிழக்கு என தமிழ் உறவுகள் திட்டமிட்டு சில சுயநல வாதிகளால் பிரிக்கப்பட்ட போது வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் யாவும் எமது உறவுகளே என சகலரும் உணரும் வகையில் பல நூற்றுக்கணக்கான பெற்றோரை யுத்தத்தாலும் சுனாமியாலும் இயற்கையாலும் இழந்த பிள்ளைகளை பராமரிக்கும் பல சிறுவர் சிறுமியர் பராமரிப்பகங்களை வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் தாபித்து தேவையான உதவிகளை வழங்கி இன்றுவரை பராமரித்து வருகின்றார்.

வறிய மாணவர் கல்விக்கான கல்வி உபகரணங்களை வழங்குதல் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் வறிய மாணவர்களின் தொடர் கல்விக்கு மாதாந்தம் உதவுதல் விதவைகளின் சுயதொழில் பயிற்சி சுயதொழில் உதவிகள் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் செயற்பாடு வறிய இளைஞர் யுவதிகளுக்கான சேவைத்திட்டங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விசேட தேவைக்குரிய எமது உறவுகளுக்கான உதவிகள் யுத்தம் சுனாமி வெள்ளப்பெருக்கு உட்பட்ட இயற்கை செயற்கை அனர்த்த வேளைகள் ஏற்படும் போது உடனடியாக உதவுதல் தொழில் பயிற்சி நெறிகளை வழங்கல் முதியோர்களை பராமரிக்கும் இல்லங்களுக்கு உதவுதல் மற்றும் ஆன்மீகப் பணிக்கு உதவுதல் உட்பட பல சேவைகளை எமது ஈழமண்ணில் துன்புறும் மக்களுக்காக தன்னை அர்பணித்து செயற்படுத்திய பெரும் மகன் கருணலிங்கம் ஐயா என்றால் மிகையாகாது.

இவரை லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயமும் லண்டன் சைவத்திருக்கோயில் ஒன்றியமும் தலைவராகப் பெற்றது ஒரு சிறப்பாகும். எப்போதும் கனகதுர்க்கை தேவி மீது தமது அயராத பற்றுதலும் நம்பிக்கையும் கொண்டவராக இக்கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் பெயரினை தமது சேவை மூலம் ஈழமண்ணில் நிலை நிறுத்தியவர் கருணலிங்கம் அவர்கள். அவரது சேவை என்றும் யுத்தத்தாலும் இயற்கை அனர்த்தத்தாலும் துன்புறும் எமது ஈழநாட்டு தமிழ் மக்களுக்கு தேவை என்பது வெள்ளிடைமலையாகும். இவர் பலதடவை தமது தலைமையில் நடைபெறும் கனகதுர்க்கை அம்மன் ஆலய செயற்பாடுகளை ஈழநாட்டிற்கு விஜயம் செய்து பார்வையிட்டுள்ளார்.

மிகுந்த தமிழ்ப்பற்றாளர். இதனாலேயே இவரை லண்டன் சைவத் திருக்கோயில் ஒன்றியம் தலைமையாகக் கொண்டிருக்கின்றது. என நாங்கள் கருதுகின்றோம். இவருக்கும் இவரைச் சார்ந்தோருக்கும் இவரது தலைமையின் கீழான சைவ ஆலயங்களின் தர்மஹர்த்தாக்களுக்கும் இப்பணிக்கு ஆலயத்திற்கு நிதி உதவி வழங்கிய மனிநேய உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும் கிழக்கு மாகாண மக்களும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

அதுபோன்றே லண்டன் சிவன் ஆலயத்தின் செயலாளரான இருந்து லண்டன் சைவத் திருக்கோயில் ஒன்றியத்தினதும் செயலாளராக திகழும் பக்தியும் பொறுமையும் கருணையும் ஈகையும் தமிழ் உணர்வு கொண்ட தன்னலமற்ற பெருமகனார் சிவத்திரு.கணேசமூர்த்தி ஐயா அவர்களும் பல சேவைகளை ஈழநாட்டின் வடக்கு மண்ணிலும் கிழக்கு மண்ணிலும் நீண்டகாலமாக வழங்கி வருகின்றார்.

இன்றும் இவரது பணியை மட்டக்களப்பு மாவட்டத்தின் செட்டிபாளையம் லண்டன் சிவன் மகளீர் இல்லம் நினைவு கூர்ந்து நிற்கின்றது. வெள்ளப்பாதிப்பு எனக் கேள்வியுள்ளதும் தனது உடல் நிலையையும் பாராது உடனடி அவசியத் தேவைக்காக தமது ஆலய மூலமும் சைவத் திருக்கோயில் ஒன்றியத்தின் மூலமும் தமது உறவுகள் மூலமும் உதவ முன்வந்ததுடன் ஏனையோர்களையும் இப்பணியில் ஈடுபடுத்திய ஒரு கருணையாளர் கணேசமூர்த்தி அவர்கள் இவரது பணியை இட்டு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும் கிழக்கு இந்து ஒன்றியமும் கிழக்கு தமிழ் மக்களும் இவருக்கும் இவரைச் சார்ந்தவர்களுக்கும் இவர் செயலாளராக உள்ள ஆலயங்கள் அமைப்புக்களின் தர்மஹர்த்தாக்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்நன்றி வழங்குதலை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை சார்பாக அதன் தலைவரும் கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்களும் பேரவையின் பொதுச் செயலாளர் ஆசிரியர் சா.மதிசுதன் அவர்களும் பேரவையின் பொருளாளரும் பட்டிருப்பு கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ந.புவனசுந்தரம் அவர்களும் கூட்டாக தெரிவிக்கின்றனர்.

அத்தோடு வெள்ளப்பாதிப்பின் போது உதவிய மனிதநேய அனைத்து உள்ளங்களுக்கும் ஆலயங்கள் அமைப்புக்கள் போன்றவற்றிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் இவர்கள் வெள்ளப்பாதிப்புக்காக நிதி உதவி வழங்கியோர் விபரம் நிதி வரவுகள் நடைபெற்ற செலவுகள் வழங்கிய உதவிகள் உதவி வழங்கப்பட்ட இடங்கள் உட்பட்ட விபரங்களை விரைவாக தமிழ்வின் மூலம் உதவி வழங்கிய உறவுகள் பார்வைக்காக அனுப்ப உள்ளனர் என்பதையும் தெரிவிக்கின்றனர்.

http://news.lankasri.com/view.php?22cIBB3035jQe4e2sGp7cb3T92Wdd0M293bceXpG3e4bqQj402dLL2c2

Leave a comment